சென்னை மாநகராட்சியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மேயர் பதவியை வகித்து வந்துள்ளனர். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முதல் மேயரான ஜே.சிவசண்முகம் பிள்ளை தொடங்கி என்.சிவராஜ், பரமேசுவரன், வை. பாலசுந்தரம் ஆகியோர் சென்னையின் மேயர் பதவியை வகித்திருந்தாலும்கூட, நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த சென்னை மாநகராட்சி மேயராக ஒரு பெண்கூட பதவிவகிக்காத சூழ்நிலையில், நடந்தமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி பட்டியல் சமூகப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, சென்னையின் முதல் பட்டியிலினப் பெண் மேயர் என்ற பெருமையை பிரியா பெற்றுள்ளார்.

Advertisment

அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

priya-mayor

இளம்வயதில் யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு வாய்ப்பு. வணக்கத்திற்குரிய மேயர் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முதலில் நான் தி.மு.க. கழகத் தலைவர் தமிழக முதல்வர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் மாமன்ற உறுப்பினராகத்தான் போட்டியிட்டேன். இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. தலைவர் என்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். அதற்கேற்ப முழுமூச்சுடன் இறங்கிச் செயல்படுவேன்.

உங்களுக்கு அரசியல் ஆர்வம் எப்படி வந்தது?

என்னுடைய குடும்பமே திராவிட பாரம்பரிய குடும்பம்தான். என் மாமா முன்னாள் எம்.எல்.ஏ., என் அப்பா பகுதி துணைச்செயலாளர். இப்படி என் குடும்பமே தி.மு.கழகத் தில் மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். சிறு வயதிலிருந்து இவர்கள் செய்யும் மக்கள் சேவைகளைப் பார்த்து வளர்ந்ததால் எனக்குள்ளும் பொறுப்புக்கு வரவேண்டும்… நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமென்ற சிறு ஆசை வளர்ந்தது. எனக்கு ஆசிரியர் ஆவதுதான் கனவாக இருந்தது, எனினும் மக்கள் சேவையே மகத்தானதாகத் தோன்றியதால் மாமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டேன். தற்போது, அது மேயர் வரை என்னை இட்டுச் சென்றுள்ளது.

Advertisment

priyamayor

வடசென்னையில் பல பிரச்சனைகள் இருக்க, முதலில் எந்தப் பிரச்சனையை கையிலெடுக்கப் போகிறீர்கள்?

நானும் வடசென்னையைச் சேர்ந்தவள் தான். இந்த மக்களின் நிலையை நானும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன். பல பிரச்சனைகள் இருந்தாலும் முதன்மை பிரச்சனையாகவும் தீராத பிரச்சனையாகவும் குடிநீர் பிரச்சனை உள்ளது. மற்றொன்று மழைத் தண்ணீர் தேங்குதல். இவற்றை முதலில் சரி செய்வேன். முதல்வரின் கனவுத் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முதல்வரின் ஆலோசனைப்படி செயல்படுத்துவேன். பிறகு மக்களின் கோரிக்கை, புகார், எழும் பிரச்சனைகளைப் பொறுத்து மற்றவற்றை வகுத்துக்கொள்வேன்.

Advertisment

உங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி உள்ளது?

என்னுடைய வீட்டில் தொடங்கி பொதுமக்கள், கழக உடன்பிறப்புகள் வரையிலும் மகத்தான வரவேற்பைப் பெற்றுள் ளேன். அதேபோல முக்கிய பொறுப்பான மேயர் தொடங்கி துணைமேயர், நகர மன்ற தலைவர்களி லும் பெண்கள் பிரதான பங்கு வகிக்கிறார்கள். இதற்கான முழுப் பெருமையும் தலைவர் முதல்வரையே சாரும். தி.மு.க.வினர் எப்போதும் முற்போக்கு வாதிகள் என்பதை அண்ணா, கலைஞர் கடந்து முதல்வரும் தற்போது நிரூபித்துக் காட்டியுள்ளார். வருகின்ற மகளிர் தினத்திற்கு தமிழக முதல்வர் உள்ளாட் சித் தேர்தலில் பெண்களுக்கு உரிய பங்களித்ததன் மூலம் ஒரு சேதியையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார் என்றுதான் நாங்கள் இதனைப் பார்க்கிறோம்.

பத்தாண்டுகளாக முடங்கிக் கிடந்த மாநகராட்சிக்கு இனி தீர்வு கிடைக்கும் என நம்பலாமா?

dff

பத்தாண்டுகாலமாக மாநகராட்சி செயல்படாமலே, உள்ளாட்சித் துறையின் நலன் மக்களுக்குப் போய்ச்சேராமல், ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களே, மக்களின் நலனைத் தனதாக்கிக் கொண்டதாலும், மக்களுக்கும் அரசுக்குமான தொடர்பு அறவே இல்லாமல் போனது. தற்போது அதுபோல் இல்லாமல் மக்களுக்கான விடியல் அரசாக இந்த தேர்தல் முடிவு விடிந்துள்ளது. இருள் சூழ்ந்திருந்த மாநகராட்சிக்கு வெளிச்சத்தை கொடுக்கப் போகிறோம், பொறுத்திருந்து பாருங்கள்.

முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்தபோது எளிமையானவராக, மக்கள் அணுகக்கூடியவராக இருந்து குறை தீர்ப்பார். உங்களது அணுகுமுறை அதுபோல எளிமையாக இருக்குமா… இல்லை உரிய இடைவெளியைப் பேணுவீர்களா?

தலைவரே எளிமையாக இருக்கும்போது அதன் வழிவந்த தொண்டன் எப்படி இருப்பேன்! அரசன் எவ்வழியோ குடிமகனும் அவ்வழியேதான். மேயர் என்பதைத் தாண்டி இளம்வயதில் என்னை நம்பி தலைமை இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளது. அதை கடமை கண்ணியத்தோடும், என்னைப் போன்று நாளைய இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கலாம் என்கின்ற அளவுக்கும் முன்னுதாரணமாகச் செயல்படுவேன்.